தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி : கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படவுள்ள இலாகா - உத்தேசப்பட்டியல் வெளியீடு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாக்களை ஒதுக்கீடு செய்வதில் பாஜக திணறிவரும் நிலையில், கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ள இலாகா குறித்த உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் கூட்டணி கட்சிகள் மத்திய அமைச்சரவையில் தங்களுக்கு தேவையான முக்கிய இலாகாக்களை கேட்டு பெறுவதில் முனைப்பு காட்டி வருகின்றன. ஆனால் பாரதிய ஜனதா கட்சி முக்கிய இலாகாக்களை வழங்குவதில் சுணக்கம் காட்டி வருகிறது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஷிண்டே தரப்பு சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் நிதித்துறை, விவசாயத்துறை, ஊரக வளர்ச்சித்துறை என முக்கியமான துறைகளை ஒதுக்கீடு செய்ய அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில், நிதித்துறை, உள்துறை, பாதுகாப்புத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை வைத்துக்கொள்ள முடிவெடுத்துள்ள பாஜக, கூட்டணியான தெலுங்கு தேசம் கட்சிக்கு மத்திய விமான போக்குவரத்து துறை மற்றும் எஃகு துறையை வழங்க முடிவு செய்துள்ளதாகவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஊரக மேம்பாட்டு துறை மற்றும் பஞ்சாயத்துராஜ் உள்ளிட்ட துறைகளை வழங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுக்கு கனரக தொழில்துறையை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் பாஜகவின் முடிவை கூட்டணி கட்சிகள் ஏற்றுக் கொள்வார்களா என்பதில் சிக்கல் நீடிக்கிறது.

Night
Day