தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் இந்தியாவை உடைக்கப் பார்க்கின்றனர் - மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் இந்தியாவை உடைக்கப் பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். 

கர்நாடகாவில் பொது ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதா பற்றிப் பேசிய துணை முதலமைச்சர் சிவகுமார், இந்த விவகாரம் நீதிமன்றம் போகும் என்றும் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம் என்றும் அரசியலமைப்பையும் மாற்றும் தீர்ப்புகள் உள்ளன என்றும் கூறியிருந்தார்.

அவரின் இந்தப் பேச்சை மாநிலங்களவையில் எழுப்பிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை காங்கிரஸ் துணிச்சலுடன் திணிப்பதாகவும், அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்பை சிதைத்து மீண்டும் எழுத காங்கிரஸ் சதி செய்வதாகவும் குற்றம்சாட்டினார். 

பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்பு மாண்பை காங்கிரஸ் களங்கப்படுத்தியுள்ளளதாக அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் குற்றம்சாட்டினார். 

இதற்கு பதிலளித்த மல்லிகார்ஜுன கார்கே, பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது என்றும் இடஒதுக்கீட்டை யாராலும் முடிவுக்கு கொண்டு வர முடியாது என்றும் குறிப்பிட்டார். அரசியலமைப்பை பாதுகாக்க, காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாரத் ஜோடோ யாத்திரை நடத்திய கட்சி காங்கிரஸ் என்றார்.

இதனிடையே இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் பேசிய டி.கே.சிவகுமார், நட்டாவை விட, தான் ஒரு விவேகமான, மூத்த அரசியல்வாதி என்றும் தனக்கு அடிப்படை பொது அறிவு இருப்பதாகவும் கூறியுள்ளார். பல்வேறு தீர்ப்புகளுக்குப் பிறகு பல மாற்றங்கள் இருக்கும் என்று சாதாரணமாகச் சொன்னதாகவும் அதனை  அரசியலமைப்பை மாற்றப் போவதாக பாஜக திரித்துக் கூறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த நாட்டிற்கு அரசியலமைப்பைக் கொண்டு வந்தது காங்கிரஸ்தான் எனக் குறிப்பிட்ட சிவகுமார், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் வந்தாலும் எதிர்கொள்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

Night
Day