எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேர்தல் நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டதாக மக்களவை எதிர்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி பாஸ்டன் நகரில் இந்திய வம்சாவழியினரிடையே உரையாற்றினார். அப்போது இந்திய தேர்தல் ஆணையம் சமரசம் செய்து கொண்டது தெளிவாக தெரிந்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இந்திய தேர்தல் முறையில் ஏதோ தவறு இருப்பதாகக் கூறிய ராகுல் காந்தி, இதுகுறித்து பலமுறை தான் கூறிவிட்டதாக தெரிவித்தார்.
மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 65 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்ததாகவும் இது நிகழ வாய்ப்பே இல்லை என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார். ஒரு வாக்காளர் தனது வாக்கை செலுத்த தோராயமாக மூன்று நிமிடங்கள் எடுத்துக் கொள்வார்கள் என்று தெரிவித்த ராகுல் காந்தி அதன்படி கணக்கிட்டால் நள்ளிரவு 2 மணி வரை வாக்களித்திருக்க வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பான வீடியோக்களை கேட்ட போது சட்டத்தையே மாற்றிவிட்டதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.