தேர்தல் பத்திரங்கள் செல்லாது - உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதை ஊக்குவிக்கும் தேர்தல் பத்திர முறையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் நடைமுறையை எளிதாக்கும் விதமாக 2018-ம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. நாட்டின் சாதாரண குடிமகன் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைவரும் நன்கொடை அளிக்கும் விதமாக, ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி வரை, வெவ்வேறு மதிப்பில் தேர்தல் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன. அதில் குறிப்பாக மற்ற கட்சிகளை விட பா.ஜ.க பல மடங்கு அதிகமாகவே நன்கொடையை பெற்றது. 

தேர்தல் பத்திரங்கள் திட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் எந்தவொரு சட்ட விதிகளும் யாருடைய உரிமையும் மீறப்படவில்லை என மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து கடந்த நவம்பர் 2-ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தேர்தல் பத்திரங்கள் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.'கவாய், ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் கொண்ட அமர்வு ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது.

அதில், தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் இருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அரசை கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தருணங்களில் நீதிமன்றங்கள் கூறி உள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், தகவல் அறியும் உரிமை சட்டம், அரசியல் சாசன பிரிவு ஆகியவற்றை மீறும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் அமைந்திருப்பதாக குறிப்பிட்டனர். 

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்புகளை வழங்க அனுமதிப்பது, தேர்தல் சமநிலையை மீறிவதாகும் எனக் கூறிய நீதிபதிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு நிதி தரும்போது அதற்கு கைமாறு எதிர்பார்க்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். 

கருப்பு பணத்தை கட்டுப்படுத்த தேர்தல் பத்திரங்கள் தவிர பல வழிமுறைகள் இருப்பதாக கூறிய நீதிபதிகள், அரசியல் கட்சிகள் தேர்தல் செயல்பாட்டில் தொடர்புடைய அமைப்புகள் எனவும், அரசியல் கட்சிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் பற்றிய தகவல்கள் அவசியம் எனவும் தெரிவித்தனர். 

தேர்தல் பத்திர முறை சட்டவிரோதமானது என்பதால் அதனை ரத்து செய்வதாக தீர்ப்பளித்த நீதிபதிகள், தேர்தல் பத்திரம் விநியோகிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என பாரத ஸ்டேட் வங்கிக்கு உத்தரவிட்டனர். மேலும், இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள் குறித்த விவரங்களை வெளியிடுவதுடன், அந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பாரத ஸ்டேட் வங்கிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பாரத ஸ்டேட் வங்கி அளிக்கும் விவரங்களை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், 15 நாட்களுக்குள் செல்லுபடியாகக்கூடிய மற்றும் பணமாக்கப்படாத தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் அந்தந்த தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் திரும்பச் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். 

தேர்தல் பத்திரம் தொடர்பான சட்டத்திருத்த மசோதாக்கள் மற்றும் கம்பெனி சட்டத்திருத்த மசோதா ஆகியவற்றையும் ரத்து செய்வதாக உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 





Night
Day