தேர்தல் பத்திரங்கள் குறித்த உத்தரவில் அனைத்து விவரங்களையும் வழங்குமாறு கூறியும் ஏன் தனித்துவ அடையாள எண்ணை வழங்கவில்லை என எஸ்.பி.ஐ. வங்கிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியவர்கள் பற்றிய விவரங்களை வெளியிடவேண்டும் எனக்கூறி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் பத்திரங்கள் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. சமர்பிக்கவேண்டும் என உத்தரவிட்டது...
அதன்படி கடந்த 12ஆம் தேதி தேர்தல் பத்திரங்களை வாங்கிய தேதி, வாங்கியவர்கள் யார் என்பது பற்றிய ஒரு கோப்பையும், தேர்தல் பத்திரங்களை பெற்ற அரசியல் கட்சிகள் எவை என்ற கோப்பையும் இரு கோப்புகளாக தேர்தல் ஆணையத்திடம் எஸ்.பி.ஐ. சமர்பித்தது. ஆனால் தேர்தல் பத்திரங்களில் இடம்பெற்ற தனித்துவ அடையாள எண்ணை எஸ்.பி.ஐ. வழங்காததால், எந்த நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை வழங்கியது என்பது தெரியாமல் உள்ளது.
இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, தீர்ப்பில் அனைத்து விவரங்களையும் சமர்பிக்குமாறு கூறியும், ஏன் தனித்துவ அடையாள எண்ணை தேர்தல் ஆணையத்திடன் சமர்பிக்கவில்லை என கேள்வி எழுப்பியது.
தேர்தல் ஆணையத்திடம் தனித்துவ அடையாள எண் பற்றிய விவரங்களை திங்கள்கிழமைக்குள் எஸ்.பி.ஐ. வழங்கவேண்டும் என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், ஏன் தனித்துவ அடையாள எண் பற்றிய விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கவில்லை என்பது குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் எஸ்.பி.ஐ. விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தது...
தனித்துவ அடையாள எண் குறித்த விவரம் வெளியானால் எந்த கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு தொகை நன்கொடை அளித்தது என்பது அம்பலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.