எழுத்தின் அளவு: அ+ அ- அ
நகர்ப்புற நக்சல்களை அடையாளம் கண்டு, அவர்களின் முகமூடியை மக்கள் கிழித்தெறிய வேண்டும் என குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய ஒருமைப்பாடு தின விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளையொட்டி நர்மதை நதிக்கரையில் அவரது உருவச்சிலை அமைந்துள்ள குஜராத் மாநிலம் கேவாடியா பகுதியில் விமானப் படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வீரர்களின் சாகசங்களைக் கண்டு ரசித்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், “தேசிய ஒருமைப்பாடு தினத்தை ஒருபுறமும், தீபாவளி பண்டிகையை மறுபுறமும் கொண்டாடி வரும் வேளையில், தீபாவளி பண்டிகை முழு நாட்டையும் விளக்குகள் மூலம் இணைத்து ஒளிரச் செய்துள்ளது என தெரிவித்தார்.
தேசிய ஒற்றுமைக்கான அர்ப்பணிப்பு, அரசின் ஒவ்வொரு பணியிலும் பிரதிபலிக்கிறது என குறிப்பிட்ட அவர், உண்மையான இந்தியர்களாக, தேசிய ஒற்றுமைக்கான ஒவ்வொரு முயற்சியையும் உற்சாகத்துடனும் ஆற்றலுடனும் கொண்டாடுவது நமது கடமை என கூறியுள்ளார்.
நாம் அனைவரின் தேச அடையாளமாக ஆதாரின் வெற்றியைப் பார்ப்பதாகவும், இந்தியாவில் பல்வேறு வரி முறைகள் இருந்த நிலையில் ஜிஎஸ்டி என்ற ஒரே நாடு ஒரே வரி முறையை உருவாக்கியதாகவும் குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு மூலம் அனைத்து பொருட்களும் ஏழைகளுக்கு கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரே நாடு ஒரே அரசியலமைப்பு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இன்று முழு நாடும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இது சர்தார் வல்லபாய் படேலுக்கு செலுத்தும் மிகப்பெரிய அஞ்சலி என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரை உச்சரிப்பவர்கள், அதை மிகவும் அவமதித்துள்ளனர் என்றும், ஜம்மு - காஷ்மீர் சட்டப்பிரிவு 370 நிரந்தரமாக புதைக்கப்பட்டுவிட்டது என்றும் முதல்முறையாக ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் பாரபட்சமின்றி நடந்துள்ளதாகவும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்