எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்ற, முதல் முறையாக புதிய நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் பிப்ரவரி 9ம் தேதி நடைபெறுகிறது. இத்தொடரில் பங்கேற்பதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து புறப்பட்ட குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பேண்டு வாத்தியங்கள் முழங்க பாரம்பரிய முறைப்படி குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் அழைத்து வரப்பட்டார்.
அதனை தொடர்ந்து, புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு முதல் முறையாக வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் வரவேற்றனர். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் புதிய நடைமுறையாக செங்கோல் ஏந்தி குடியரசுத் தலைவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவையில் கூடியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கரகோசம் எழுப்பி குடியரசுத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.