எழுத்தின் அளவு: அ+ அ- அ
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் விமர்சித்துள்ளார்.
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக் கெடு விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், குடியரசுத் தலைவரை நீதிமன்றம் வழிநடத்தும் முறையை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் சட்ட அறிஞர்களும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில், டெல்லி பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜெகதீப் தன்கர், நாடாளுமன்றம்தான் உயர்ந்தது என்றும் அதற்கு மிஞ்சிய அதிகாரம் படைத்த எதுவும் இல்லை என்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தை மறைமுகமாக விமர்சித்துள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் அரசியலமைப்பு என்னவாக இருக்கும் என்பதற்கு இறுதி எஜமானர்களாக இருப்பார்கள் என்றும் அதற்கு மேல் அதிகாரம் படைத்தவர்கள் யாரும் கிடையாது என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
ஒரு வழக்கில், முகவுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி அல்ல என்றும் மற்றொரு வழக்கில் அது அரசியலமைப்பின் ஒரு பகுதி என்றும் உச்சநீதிமன்றம் முரணாக தீர்ப்பு கூறுவதாகவும் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விமர்சித்துள்ளார். அவரது முந்தைய பேச்சிற்கு, நிர்வாகத்தில் தலையிடுவதாக தங்கள் மீது புகார் கூறப்படுவதாக அடுத்த தலைமை நீதிபதியாக வர உள்ள பி.ஆர்.கவாய் நேற்று கூறியிருந்தார். இந்தநிலையில் ஜெகதீப் தன்கரின் தற்போதைய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நாடாளுமன்றமோ, நிர்வாகமோ அல்ல, அரசியலமைப்புச் சட்டமே அனைத்தையும் விட உச்சமானது என மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார். குடியரசு துணைத் தலைவரின் பெயர் குறிப்பிடாமல் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சட்டங்களை இயற்றுவதற்கான முழுமையான அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளது என்றும் அரசியலமைப்பை விளக்கி முழுமையான நீதியை வழங்க வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்திற்கு உள்ளது என்றும் இந்த நாடு இதுவரை சட்டத்தை அப்படித்தான் புரிந்து கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார். சில பாஜக தலைவர்கள் விமர்சிக்கும் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகள், நமது அரசியலமைப்பு சட்டத்துடன் ஒத்துப்போகின்றன மற்றும் தேசிய நலனால் வழிநடத்தப்படுகின்றன எனக் குறிப்பிட்டுள்ளார்.