நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகிறார் குடியரசு தலைவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு  இன்று உரையாற்ற உள்ளாா். தொடர்ந்து மாநிலங்களவையின் அமர்வும் இன்று தொடங்குகிறது.

18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடா், கடந்த திங்கள்கிழமை தொடங்கிய நிலையில் முதல் இரண்டு நாட்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்றனா். நேற்று குரல் வாக்கெடுப்பு மூலம் தோ்தல் நடத்தப்பட்டு சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவா் திரவுபதி முர்மு உரையாற்றுகிறார். 

இதையொட்டி, குதிரைப் படை அணிவகுப்புடன் நாடாளுமன்றம் அழைத்து வரப்படும் அவரை பிரதமா் மோடி மற்றும் இரு அவைகளின் தலைவா்களும் வரவேற்று அழைத்துச் செல்வார்கள். பின்னா், மக்களவையில் நடைபெறும் கூட்டுக் கூட்டத்தில் அவா் உரையாற்றுவாா். அதில், பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசின் கொள்கைகள், செயல்திட்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கும் எனத் தெரிகிறது. 

இதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது விவாதம் நடைபெறும். ஜூலை 2 மற்றும் 3-ம் தேதிகளில் விவாதத்துக்கு பிரதமா் மோடி பதிலளிப்பாா். இந்த கூட்டத் தொடரில், நீட், நெட் போன்ற போட்டித் தோ்வு முறைகேடு விவகாரம் பெரிதாக எதிரொலிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Night
Day