எழுத்தின் அளவு: அ+ அ- அ
அதானி உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் இன்றும் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் மூன்றாவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25ம் தேதி துவங்கியது. அதானி விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த கோரியும், மணிப்பூர் பிரச்னை, உத்தரப் பிரதேச கலவரம் ஆகிய பிரச்னைகளை எழுப்பியும் எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக கூட்டத் தொடரின் முதல் நாளே இரு அவைகளும் முடங்கின. 26ம் தேதி அரசியல் சாசன நாளை முன்னிட்டு நாடாளுமன்றத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அதானி விவகாரம் தொடர்பாக நேற்றும் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. இந்நிலையில், இன்று காலை மக்களவை கூடியதும், அதானி உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்பி எதிர் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நண்பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்ட அவை, மீண்டும் கூடிய போதும் அமளி தொடர்ந்தது. இதையடுத்து மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், முதலில் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவையும் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர் கட்சிகள் அமளியால் 3வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.