நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமல் : மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இந்திய குடியுரிமை சட்டத்தை திருத்தியமைத்த மத்திய பாஜக அரசு, கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இச்சட்டத்தை நிறைவேற்றியது. அதன்படி, 2014 டிசம்பருக்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பொளத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச்சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், குறிப்பிட்ட இந்த 6 மதத்தினருக்கும் குடியுரிமை பெற்றுக் கொடுக்கும் சிஏஏ சட்டத்தில், இஸ்லாமியர்கள் விடுபட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. சி.ஏ.ஏ.வை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்த நிலையில், அந்த போராட்டங்களில் கலவரம் மற்றும் துப்பாக்கிச்சூடு என 25 பேர் கொல்லப்பட்டனர். தொடர் போராட்டங்களால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த குடியுரிமை திருத்த சட்டம், தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்திற்கான விதிகள் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசின் அரசிதழிலில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே இந்தியாவில் அமலாகும் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தால், எந்தவொரு இந்தியரின் குடியுரிமையும் பறிக்கப்படாது எனவும், அண்டை நாட்டை சேர்ந்த சிறுபான்மை சமூக மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப்படுவதாகவும் மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Night
Day