எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்று 3-வது முறை தாமரை மலர்ந்ததாக கூறிய பிரதமர் மோடி, காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்தது, இந்திய அரசியல் சாசனத்துக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானாவில் 3வது முறையாக பாஜக வென்று ஆட்சி அமைப்பதாகவும், காஷ்மீரில் அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது இந்திய அரசியல் சாசனத்துக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
ஜம்மு காஷ்மீர் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என மக்களுக்கு உறுதியளிப்பதாக தெரிவித்தார். மேலும் பாராட்டத்தக்க வகையில் செயல்பட்ட தேசிய மாநாட்டுக் கட்சிக்கு பிரதமர் பாராட்டு தெரிவித்தார். மக்கள் தங்களது சொந்த கலாச்சாரத்தையே வெறுக்கும் நாட்டை உருவாக்க காங்கிரஸ் விரும்புவதாக தெரிவித்தார். இந்திய சமுதாயத்தை பலவீனப்படுத்தி, அராஜகத்தை பரப்புவதன் மூலம் நாட்டை பலவீனப்படுத்த காங்கிரஸ் விரும்புவதாகவும் விமர்சனம் செய்தார். மேலும் கூட்டணி கட்சிகளை விழுங்கும் ஒட்டுண்ணியாக காங்கிரஸ் உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.