நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்ததாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், நேற்று காலை, பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. 

இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றதாகவும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அதற்கு அடுத்த இரண்டு தினங்களில், வடமேற்கு திசையில் தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும், இதனால், கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. 

இதேபோன்று, சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மாநகரின் சில பகுதிகளில், அதிகாலை நேரங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாக உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மீனவர்கள் இன்று ஆழ்கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Night
Day