நாளை பதவியேற்கும் தலைமை தேர்தல் ஆணையர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நாளை பதவியேற்க உள்ளார்.

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஒய்வு பெற்றதையடுத்து, புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது. இந்நிலையில் ராஜீவ் குமாருக்குப் பிறகு, தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், கடந்த 1964-ல் உத்தரப்பிரதேசத்தில் பிறந்தவர். கான்பூர் ஐ.ஐ.டி-யில் சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்ற ஞானேஷ்குமார், இந்திய பட்டய நிதி ஆய்வாளர்கள் படிப்பையும் பயின்றுள்ளார். 

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் பொருளாதாரமும் படித்துள்ள இவர், கடந்த 1988-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றத் தொடங்கி, 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை பாதுகாப்பு அமைச்சகத்தில் இணை செயலாளராக பணியமர்த்தப்பட்டார்.

அதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சியில் 2019-ல் ஜம்மு காஷ்மீரில் பிரிவு 370-ஐ நீக்கி, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் மசோதாவை உருவாக்குவதில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக முக்கிய பங்காற்றினார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் அமித் ஷா தலைமையிலான கூட்டுறவு அமைச்சகத்தின் செயலாளர் பதவியிலிருந்து ஓய்வுபெற்ற ஞானேஷ்குமார், அடுத்த இரண்டு மாதங்களில் இந்திய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அடுத்த 11 மாதங்களில் தற்போது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இவர் இந்தாண்டு பீகாரில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல், 2026-ம் ஆண்டு நடக்க உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்காள சட்டமன்றத் தேர்தல்கள், 2027-ல் நடைபெற உள்ள கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச தேர்தல் மற்றும் 2029 நாடாளுமன்ற தேர்தலையும் நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனிடையே புதிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நியமன சட்டத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நாளை நடைபெற உள்ளதால், விசாரணைக்கு பின்னர் தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்யலாம் என்ற கருத்தை ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். அவரது கருத்து நிராகரிக்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எதிர்ப்பையும் மீறி, புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.


Night
Day