எழுத்தின் அளவு: அ+ அ- அ
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க திரை பிரபலங்களுக்கும், சென்ட்ரல் விஸ்டா திட்டம், வந்தே பாரத் மற்றும் மெட்ரோ திட்ட பணியில் ஈடுபட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 290க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கிறது. நாளை மறுநாள் 3வது முறையாக நரேந்திரமோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். அவருடன் மத்திய அமைச்சரவையும் பதவியேற்க உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள பிரதமர் மற்றும் மத்திய அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பதவியேற்பு விழாவில் பங்கேற்க இலங்கை, நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாட்டு தலைவர்களுக்கும், உலக நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எதிர்க்கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா பிரபலங்களுக்கும் விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், வந்தே பாரத் ரயில் திட்டத்தில் பணியாற்றிய ஊழியர்கள், மெட்ரோ திட்டங்களில் பணியாற்றிய ஊழியர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.