எழுத்தின் அளவு: அ+ அ- அ
மியான்மர் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 700ஐ கடந்த நிலையில், பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என அஞ்சப்படுகிறது. பல்வேறு நகரங்களில் சீர்குலைந்துள்ள கட்டிட இடிபாடுகளை அப்புறப்படுத்தி, சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.
சீட்டுக்கட்டு போல் சரிந்த அடுக்குமாடி கட்டிடங்கள்... அலறி அடித்து ஓடிய மக்கள்... மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கோரக் காட்சிகள்தான் இவை. நிலநடுக்கத்தால் வீடுகள், அலுவலகங்கள் உருக்குலைந்து எங்கு பார்த்தாலும் கான்கிரீட் குவியல்கள் காணப்படும் நிலையில், மக்கள் அலறி அடித்து வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
மியான்மர் நாட்டின் வடகிழக்கு நகரமான சகாய்ங்கில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவானது. அதைத் தொடர்ந்து அடுத்த 12 நிமிடங்களில் ரிக்டர் அளவில் 6.4 ஆக மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் மியான்மரை உலுக்கியது. இதனால் மியான்மரில் பல இடங்களில் கட்டிங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மாண்டலே உள்ள ஒரு மசூதி இடிந்து விழுந்ததில் உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
மேலும் இராவாடி நதியின் மேல் இருந் ஆவா பாலம் இடிந்து விழுந்ததில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது.
மியான்மர் தலைநகர் நேபிடாவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனை ஒன்றில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி காயம் அடைந்தவர்கள் நிரம்பி வழிந்தனர். மருத்துவமனைக்கு உள்ளே இடம் இல்லாததால் வளாகத்திலும் அருகிலுள்ள சாலைகளிலும், இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக மியான்மர் அதன் தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மியான்மரின் மத்திய பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அண்டை நாடான தாய்லாந்திலும் கடுமையாக உணரப்பட்டது. தலைநகர் பாங்காக் உள்ளிட்ட இடங்களில் உயரமான கட்டிடங்கள் பல சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன. இதனால் பல கட்டிடங்களில் இருந்து மக்கள் அச்சத்தில் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியே ஓடினர். பல கட்டிடங்கள் அங்கும் இங்கும் அசைந்தாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், மெட்ரோ ரயில் மற்றும் விமான சேவைகள் உடனடியாக நிறுத்தப்பட்டன. பாங்காக்கில் சாதுசாக் பூங்கா அருகில் கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்த 30 அடுக்குமாடி கட்டிடம் நொடிப் பொழுதில் சரிந்து விழுந்து தரைமட்டமானது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 43 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
மியான்மரைத் தாக்கி தாய்லாந்து தலைநகரில் பெரிய சேதத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, மின்யாமர் மற்றும் தாய்லாந்தை உலுக்கிய நிலநடுக்கத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. வானுயர்ந்த கட்டிடங்கள் குலுங்குவது, புழுதி பறக்க தரைமட்டமாவது போல சமூக வலைதளங்களில் வெளியாகும் வீடியோக்களை பார்க்கும் போது பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே இந்தியாவில் கொல்கத்தா, இம்பால், மேகாலயா இந்திய பகுதிகளிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.