நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

நேர்மையாக தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

மருத்துவ கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5-ம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியான நிலையில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததாகவும் தேர்வு முடிவுகளில் கருணை மதிப்பெண் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும் அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மறு தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்திய நிலையில் நடப்பாண்டிற்கான இளநிலை மருத்துவக் கல்வி நுழைவு தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இம்மனுக்கள் மீதான விசாரணை வரும் 8ம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில் தேசியத் தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வு முறைகள் குறித்து கருத்துக்களைக் கேட்கவும் ஆலோசனை நடத்தவும் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழு, இதுவரை 4 கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

மேலும் நீட் தேர்வு விவகாரத்தில் அனைத்து முறைகேடு வழக்குகளையும் விசாரிக்க வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், தேர்வுகளில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் குற்றம் செய்தவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது. 

நீட் தேர்வில் மிகப்பெரிய அளவிலான முறைகேடுகள் நடைபெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பகுதியில் முறைகேடுகள் நடைபெற்ற குற்றச்சாட்டுகளுக்காக நேர்மையாக தேர்வுகளை எழுதிய ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கக்கூடிய வகையில் தேர்வை ரத்து செய்ய முடியாது என மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Night
Day