நீட் வினாத்தாள் கசிந்ததற்கு ஆதாரம் இல்லை-கல்வி அமைச்சர் விளக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த 7 ஆண்டுகளில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. மக்களவை இன்று கூடியதும் கேள்வி நேரம் துவங்கியது. அப்போது நீட் தேர்வு பிரச்னையை அவையில் எழுப்பிய எதிர்க் கட்சிகள், மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பினர். எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பிக்கள் மாணிக்கம் தாகூர், பிரேமசந்திரன், சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் நீட் முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கடந்த 7 ஆண்டுகளில் 70 முறைக்கு மேல் வினாத்தாள் கசிந்துள்ளதாகவும், வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினார். 

ஆனால், எதிர்க்கட்சி எம்பிக்களின் குற்றச்சாட்டுகளை மறுத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு எதையும் மறைக்கவில்லை என்று கூறினார். கடந்த 7 ஆண்டுகளில் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய அவர், தேசிய தேர்வு முகமை 240க்கும் மேற்பட்ட தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதாக கூறினார். நீட் தேர்வு தவறுகளுக்கு முந்தைய காங்கிரஸ் அரசே காரணம் என்றும், அந்த தவறுகளை தற்போது சரி செய்து வருவதாகவும் கூறிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தற்போது நடந்துள்ள சிறு சிறு தவறுகள் கூட இனி நடக்காது என்று உறுதியளித்தார். தற்போது குறைகூறும் காங்கிரஸ் கட்சி, முறைகேடுகளை தடுக்க 2010ம் ஆண்டு சட்டம் கொண்டு வராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டுவர காங்கிரஸ் கட்சி தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார். 

Night
Day