பஞ்சாபில் துப்பாக்கிச்சூடு - நூலிழையில் உயிர் பிழைத்த சுக்பீர்சிங் பாதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பஞ்சாப் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சுக்பீர் சிங் பாதல் மீது  துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப்பில் பலமுறை ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த சுக்பிர் சிங் பாதல், அம்மாநிலத்தின் துணை முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு, அகாலி தளம் ஆட்சியின்போது, குருத்வாராவில் இருந்து, சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்த் சாஹிப் திருடு போன நிலையில், பின்பு பரித்கோட்டின் பர்காரி என்ற இடத்தில் புனித நுாலின் பக்கங்கள் கிழிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டன. மேலும் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் ராம் ரஹிம், சீக்கிய மதகுருவை போன்று உடையணிந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றதையடுத்து, சீக்கியர்களுக்கும், தேரா சச்சா சவுதா ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது துணை முதலமைச்சராக இருந்த சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி ராம் ரஹிமுக்கு மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரங்களை விசாரித்த சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகாலி தக்த்திடம், தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு சுக்பிர் சிங் கடந்த ஆகஸ்டில் பகிரங்க மன்னிப்பு கோரினார். இதையடுத்து அவர் செய்த குற்றத்திற்காக அமிர்தசரஸ் பொற்கோவில் உட்பட பல்வேறு குருத்வாராக்களில் உள்ள சமையலறை, குளியல் மற்றும் கழிப்பறைகளை சுக்பிர் சிங் பாதல், சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் விக்ரம் சிங் மஜிதியா மற்றும் அமைச்சரவையில் இடம்பெற்ற தலைவர்கள் சுத்தம் செய்ய வேண்டும் என தண்டனை அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் முதல் பொற்கோவிலில் உள்ள அனைத்து அறைகளையும் சுக்பீர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள், சுத்தம் செய்து தங்களின் தண்டனையை நிறைவேற்றி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று பொற்கோவிலின் வாயிலில் பாதுகாவலராக சேவையாற்றிய சுக்பீர் சிங் மீது, மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், குண்டு குறி தவறியதால் சுக்பீர் சிங் பாதல் அதிர்ஷ்டவமாக உயிர்பிழைத்தார்.

இதனை பார்த்த அங்கிருந்த நபர்கள், தாக்குதலில் ஈடுபட்ட நபரை தடுத்து நிறுத்தி, கையும் களவுமாக பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இருப்பினும் திடீரென நடத்தப்பட்ட தாக்குதலால் பாதலை சுற்றி ஏராளமான தொண்டர்களும், அதிகாரிகளும் சூழ்ந்துக்கொண்டார். இதனால் பொற்கோவில் முழுவதும் களேபரமாக காட்சி அளித்தது.

இதனிடையே, போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டவர் நரேன் சிங் என்பதும், காலிஸ்தானி பயங்கரவாத குழுவான பாபர் கல்சாவுடன் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சுக்பீர் சிங் பாதல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Night
Day