எழுத்தின் அளவு: அ+ அ- அ
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடியாதது மற்றும் அது நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் பதஞ்சலியின் ரோஸ் சர்பத்திற்கான விளம்பர வீடியோவை ராம்தேவ் வெளியிட்டிருந்தார். அதில், ரூஹ் அஃப்சா குளிர்பானத்தின் பெயரைக் குறிப்பிடாமல், சர்பத்தை விற்று சம்பாதிக்கும் பணத்தை ஒரு நிறுவனம் மசூதிகள் மற்றும் மதரஸாக்கள் கட்ட பயன்படுத்துகிறது என்றும் ஆனால் பதஞ்சலி ரோஸ் சர்பத்தை குடித்தால், குருகுலங்கள் மற்றும் பதஞ்சலி பல்கலைக்கழகம் கட்டப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. மேலும் லவ் ஜிஹாத் மற்றும் வாக்களிப்பு ஜிஹாத் போல, ஒரு சர்பத் ஜிஹாத்தும் நடக்கிறது என விளம்பரப்படுத்தியிருந்தது.
இதையடுத்து ரூஹ் அஃப்சா உற்பத்தியாளர் ஹம்தார்ட், ராம்தேவுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், அந்த வீடியோவை சமூக ஊடகங்களில் இருந்து நீக்கக் கோரியிருந்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது ரூஹ் அஃப்சா தயாரிப்பை இழிவுபடுத்துவதைத் தாண்டி, இது ஒரு அதிர்ச்சியூட்டும் வழக்கு என்றும், இது வகுப்புவாதப் பிரிவினை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தங்கள் தரப்பு வாதத்திற்கு கால அவகாசம் கோரிய பதஞ்சலி நிறுவனத்திற்கு நீதிபதி பன்சால் கண்டனம் தெரிவித்தார். பிற்பகலுக்குள் வாதிடா விட்டால் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார். இதையடுத்து ஹம்தார்டு தயாரிப்புக்கு எதிரான விளம்பரங்களைத் திரும்பப் பெறுவதாக பதஞ்சலி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பாபா ராம்தேவ் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மே 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.