எழுத்தின் அளவு: அ+ அ- அ
பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக முழு காஷ்மீரும் ஒன்றுபட்டுள்ளதாகவும், இது பள்ளத்தாக்கில் பயங்கரவாதம் முடிவிற்கு வருவதற்கான தொடக்கம் என்றும் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் உமர் அப்துல்லா, பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் பெயர்களையும் மாநிலங்களையும் வாசித்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்க தனக்கு வார்த்தைகள் இல்லை என்றார். ஒரு விருந்தினராக, அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்வது தனது பொறுப்பு என்றும் ஆனால் தன்னால் முடியவில்லை என ஆற்றாமையுடன் குறிப்பிட்டார்.
ரத்த வெள்ளத்தில் தங்கள் தந்தையர்களைப் பார்த்த குழந்தைகளுக்கு, சில நாட்களுக்கு முன் திருமணமான அந்த கடற்படை அதிகாரியின் மனைவிக்கு என்ன பதில் சொல்ல முடியும்? என உமர் அப்துல்லா வேதனை தெரிவித்தார். இந்த கொடூரத்தைச் செய்தவர்கள் நமக்காகச் செய்ததாகக் கூறுகிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் நாங்கள் இப்படிச் செய்யச் சொன்னோமா என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மிக மோசமான காலங்களில் நம்பிக்கையைத் தேட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், ஜம்மு-காஷ்மீரில் தாக்குதலுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி தன்னிச்சையாக போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என்றார். துப்பாக்கிகளால் பயங்கரரவாதத்தை கட்டுப்படுத்த முடியுமே தவிர, முடிவுக்குக் கொண்டுவர முடியாது எனக் கூறிய உமர் அப்துல்லா, மக்கள் நம்முடன் இருக்கும்போது அது முடிவுக்கு வரும் என்றும் தற்போது அந்த நிலை உருவாகியுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்ந்து, இக்கூட்டத்தொடரில் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற குழு தலைவர்கள் என பலர் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து உரையாற்றிய நிலையில் துணை முதலமைச்சர் சுரீந்தர் சவுத்ரி பயங்கரவாத தாக்குதலை கண்டித்து தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார். இந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது. பின்னர் ஜம்மு & காஷ்மீர் சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.