பஹல்காம் தாக்குதல் - பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு அதிரடி நடவடிக்கை

எழுத்தின் அளவு: அ+ அ-

பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையதாக கருதப்படும் பாகிஸ்தான் மீது இந்திய அரசாங்கம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா தளமான பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானின் ஆதரவு அமைப்பான லஷ்கர் - இ - தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் பொறுப்பேற்றது. இதனால் இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது நிரூபணமான நிலையில், அந்நாட்டு மீது அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. அதில் இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதன்படி அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

மேலும், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தை மூட மத்திய அரசு அறிவுறுத்துள்ளது. இந்த அறிவிப்புக்கு முன்னதாக பஹல்காம் தாக்குதல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை கொண்டாடும் விதமாக பாகிஸ்தான் தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக பாகிஸ்தான் தூதரகத்திற்குள் ஊழியர் ஒருவர் கேக் எடுத்து செல்லும் காட்சி சமூக வலைத்தளத்தில் வைராகி வரும் நிலையில், இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவில் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ X தள பக்கம் முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று X நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

மேலும், பாகிஸ்தான் நடிகர் பவாட் கான் நடிப்பில் உருவாகி உள்ள அபீர் குலால் படத்தை இந்தியாவில் வெளியிட மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை திரையிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு அமைப்பினரும் எச்சரிக்கை விடுத்ததால் தற்போது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலால் நிலைக்குலைந்துள்ள ஜம்முகாஷ்மீரில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறி வருகின்றனர். இதனால் பொழுதுப்போக்கு இடங்களும், சாலைகளும், சுற்றுலா தளங்களும் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களுக்கு பொதுமக்கள் வெளியில் வருவதற்கே அஞ்சுவதால், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.




Night
Day