பாஜக ஆட்சியமைக்க உரிமைகோர முடிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

நாட்டின் 18-வது நாடாளுமன்ற மக்களவையைத் தேர்வு செய்வதற்காக, மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டத்தில் 66.14 சதவிதமும், 2ம் கட்டத்தில் 66.71 சதவிதமும், 3ம் கட்டத்தில் 65.68 சதவிதம் வாக்குகளும் பதிவானதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 4ம் கட்டத்தில் 69.16 சதவிதமும், 5-ம் கட்டத்தில் 62.2 சதவிதமும், 6-ம் கட்டத்தில் 63.36 சதவிதமும், 7-ம் கட்டத்தில் 61.63 சதவிதமும் வாக்குகள் பதிவாகின. சராசரியாக இந்த நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 64 கோடி வாக்காளர்கள் வாக்குப்பதிவு செய்தனர். 

மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மீதம் உள்ள 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், காலை 8 மணிக்கு தொடங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் சுற்று வாரியாக வாக்குகளின் எண்ணிக்கை வெளியிடப்பட்டது.

பொரும்பாலான தொகுதிகளில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எதிர்கட்சிகள் சார்பில் கட்டமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 17க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. 

இந்நிலையில் ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில், பெரும்பாலான தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளதால் 3-வது முறையாக பாஜக ஆட்சியமைக்க உள்ளது. 

Night
Day