பாஜக எம்.பி. மண்டை உடைப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு தொடர்பான விவகாரத்தில், நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்களும், பாஜக எம்பிக்களும் போட்டி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது பாஜக எம்பி ஒருவரின் மண்டை உடைந்ததால் பரபரப்பு நிலவியது.

மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் பேசினார். அப்போது, அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பேசியதாகக் கூறி, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் அமித் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. அமித் ஷா பதவி விலகக் கோரி எதிர்க் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதைக் கண்டித்தும், அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி அவமதித்து விட்டதாகவும் குற்றம்சாட்டி, நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்பிக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி அவர்கள் பேரணியும் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக, எதிர்க் கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி எம்பிக்கள், மத்திய அமைச்சர் அமித் ஷாவைக் கண்டித்தும் அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி உள்பட எதிர் கட்சி எம்பிக்கள் நீல நிற உடை அணிந்து அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக சென்றனர். அப்போது நாடாளுமன்ற நுழைவு வாயில் சுவர் மீது ஏறி எதிர்க் கட்சி எம்பிக்கள் சிலர், அமித் ஷாவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு நிலவியது. 

இந்தியா கூட்டணி மற்றும் பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் பாஜக எம்பி பிரதாப் சந்திரா சாரங்கி மண்டை உடைந்ததால் பரபரப்பு நிலவியது. நாடாளுமன்ற நுழைவாயில் படிக்கட்டுக்கு தான் அருகே நின்று கொண்டிருந்தபோது வந்த ராகுல் காந்தி, அங்கிருந்த எம்பி ஒருவரை தள்ளிவிட, அவர் தன் மீது விழுந்ததால் மண்டை உடைந்ததாக பாஜக எம்பி பிரதாப் சந்திரா சாரங்கி குற்றம் சாட்டினார்.

இதனிடையே, நாடாளுமன்ற நுழைவு வாயில் பாஜக எம்பிக்கள் சிலர், தம்மை தள்ளி விட்டதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். இதுபோன்ற மிரட்டல்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அதேசமயம், பாஜக எம்பிக்களை தாக்கியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் வலியுறுத்தியுள்ள மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, இல்லையெனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்திற்குள் செல்ல முயன்ற காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி ஆகியோரை பாஜக எம்பிக்கள் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இதனிடையே, அம்பேத்கர் குறித்த பேச்சு தொடர்பான பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் பதவி விலக வலியுறுத்தியும் எதிர்க் கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்ற இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டன.

Night
Day