மக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும், ஒரு நாடு ஒரே தேர்தல் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் மோடி, அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
பாஜக தேர்தல் அறிக்கையில், ஒரு நாடு ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்படும் என்றும் பொது வாக்காளர் பட்டியல் அறிமுகப்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கான இலவச ரேசன் திட்டம் தொடரும் என்றும் தனியாக வாழும் 75 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும் எனவும், ஓய்வுபெற்ற விளையாட்டு வீரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறைகளில் வாய்ப்பு வழங்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏழைகளுக்கு 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் சர்வ மதத்தினருக்கும் பொதுவாக பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது.
மேலும், பாதுகாப்பான போக்குவரத்தை ஏற்படுத்த மின்சாரப் பேருந்துகள் திட்டம் அமைக்கப்படும் என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு இலவச மின்சார விநியோகம் செய்யப்படும் என்றும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.