மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த இழுபறி நீடித்து வரும் நிலையில், பாஜக மற்றும் பிரதமர் மோடி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என காபந்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23-ம் தேதி வெளியானபோது, ஆளும் மகாயுதிக் கூட்டணியின் வரலாறு காணாத வெற்றியை விட அடுத்த முதலமைச்சர் யார் என்பதுதான் அரசியல் அரங்கில் பேசுபொருளாக இருந்தது. காரணம், கடந்த முறை உத்தவ் தாக்கரேவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காகவே, சிவசேனாவை உடைத்து ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரசை உடைத்து அஜித் பவாரை துணை முதலமைச்சராகவும் ஆக்கி, அதிக இடங்கள் கைவசம் இருந்தும் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிசும் துணை முதலமைச்சராக பதவி வகித்திருந்தார்.
ஆனால் இம்முறை மொத்தமுள்ள 288 தொகுதிகளில் ஆளும் மகாயுதி கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றினாலும் பாஜக மட்டும் 132 இடங்களில் வென்றுள்ளது. ஷிண்டே சிவசேனா 57, அஜித் பவார் கட்சி 41 இடங்களிலும் வென்றுள்ளன. இதையடுத்து இம்முறை முதலமைச்சர் பதவி தேவேந்திர பட்னாவிஸுக்குத்தான் என பாஜகவினர் குரல் எழுப்பினர். ஆனால் வெற்றிக்கு காரணம் ஷிண்டேதான், அவருக்கே மீண்டும் முதலமைச்சர் பதவி என அவர் தரப்பு சிவசேனாவும் கூறியது.
இந்தக் குழப்பத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகி 4 நாட்கள் கடந்த பின்னும் முதலமைச்சரை முடிவு செய்வதில் மகாயுதிக் கூட்டணி திணறி வருகிறது. இதையடுத்து மகாயுதியின் 3 தலைவர்களையும் பாஜக தலைமை நாளை டெல்லிக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஃபட்னாவிஸ் முதலமைச்சர், ஏக்நாத் ஷிண்டேவின் மகன் ஸ்ரீகாந்திற்கு துணை முதலமைச்சர் பதவி என்ற திட்டத்தின் அடிப்படையில் முடிவு காணப்படலாம் என்ற தகவலும் வெளியானது.
இந்தநிலையில் தானேவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஏக்நாத் ஷிண்டே, மீண்டும் முதலமைச்சர் பதவியை ஏற்க விரும்பவில்லை என்றும் முதலமைச்சர் யார் என்பது குறித்த விவகாரத்தில் பிரதமர் மோடி எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ்தான் அறிவிக்கப்படுவார் என்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.