பிரதமர் அலுவலத்தில் முறைப்படி பொறுப்பேற்றார் மோடி

எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் உள்ள தமது அலுவலகத்தில் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பிரதமர் மோடி, தமது முதல் கையெழுத்தாக விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக மோடி நேற்று பதவியேற்றார். டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மோடிக்கு பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்நிலையில், டெல்லியில் சவுத் பிளாக்கில் உள்ள தமது அலுவலகத்திற்கு இன்று சென்ற பிரதமர் மோடி, முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்காக சவுத் பிளாக்கிற்கு வந்த பிரதமர் மோடியை, அங்கு பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் இருபுறமும் வரிசையாக நின்று கைதட்டி வரவேற்றனர்.

அவர்களின் வரவேற்பை கைகூப்பியபடி புன்முறுவலுடன் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, பிரதமரின் கிஷான் நிதி திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு 17-வது தவணையாக நிதியுதவி வழங்கும் கோப்பில் பிரதமர் மோடி முதல் கையெழுத்திட்டார். இதன் மூலம் 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 

கோப்பில் கையெழுத்திட்ட பின்னர் பேசிய பிரதமர் மோடி, விவசாயிகள் நலனில் தமது அரசு முழு ஈடுபாட்டுடன் இருப்பதாகக் கூறினார். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறை நலனுக்கு மேலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதில் ஆர்வமுடன் இருப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

இதனிடையே, புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தில் மேலும் 2 கோடி வீடுகள் கட்டுவதற்கும், மேலும் இந்த திட்ட பயனாளிகளுக்கான நிதியுதவியை 50 சதவீதம் அதிகரிக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.


Night
Day