பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 86.

இந்தியாவில் முக்கியமானத் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா, கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர கண்காணிப்பு பிரிவான ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார்.

நவல் டாடா- சுனு தம்பதியின் மகனாக, கடந்த 1937ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ம் தேதி சூரத் நகரில் பிறந்தவர் ரத்தன் டாடா. ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் நிர்வாகப்படிப்பை முடித்த ரத்தன் டாடா, பின்னர் இந்தியா திரும்பி டாடா நிறுவனத்தில் சிறு சிறு பொறுப்புகளை வகித்து தொழில் நுணுக்கங்களை கற்றுத்தேர்ந்தார். இதையடுத்து டாடா வியாபார குழுமத்தை இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதற்கும் ரத்தன் டாடா எடுத்துச்சென்றார். 

வாகனம், ஐ.டி, இரும்பு, தொழில்துறை என பலற்றிலும் டாடா நிறுவனம் முத்திரை பதிக்க காரணமான ரத்தன் டாடா, நடுத்தர மக்களின் வாகனக்கனவை நனவாக்க டாடா நானோ காரை அறிமுகம் செய்து வைத்தார். இதுபோல், அன்றாடம் முதல் ஆடம்பரம் வரை அனைத்து துறைகளிலும் கால் பதித்த ரத்தன் டாடாவின் தலைமையின் கிழ் 50 மடங்கு லாபத்தை பெருக்கியது டாடா குழுமம். இதனிடையே, கடந்த 2012-ம் ஆண்டில் டாடா குழுமத்தலைவர் பதவியில் இருந்து ரத்தன் டாடா ஓய்வு பெற்றார். 

இந்த நிலையில், தொழில்துறையில் ஆற்றிய சாதனைகளுக்காக பத்மபூஷண், பத்ம விபூஷன், விருதுகளை ரத்தன் டாடா பெற்றுள்ளார். நாட்டின் முன்னணி தொழிலதிபரான ரத்தன் டாடா, கொரோனா நிவாரண பணிகளுக்காக ஆயிரத்து 500 கோடி வழங்கி இருந்தார்.

பல லட்சம் இளைஞர்களுக்கு முன்னோடியாகவும் உலக அரங்கில் திறமையான தொழிலதிபராகவும் திகழ்ந்த ரத்தன் நவல் டாடாவின் மறைவு, ஒட்டுமொத்த தேசத்தையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு தொழிலதிபர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரத்தன் டாடாவின் உடல் தெற்கு மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையத்தில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும், அவரது உடலுக்கு மஹாராஷ்டிர மாநில அரசு சார்பில் அரசு மரியாதை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ரத்தன் டாடாவின் மறைவு, கார்ப்பரேட் வளர்ச்சியுடன், தேசத்தைக் கட்டியெழுப்பியதோடு, சிறந்து விளங்கும் நெறிமுறைகளையும் ஒருங்கிணைத்த ஒரு முக்கிய நபரை இந்தியா இழந்துவிட்டதாக குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்ற அவர், அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தி வந்ததாக தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவிற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, ரத்தன் டாடா ஒரு தொலைநோக்கு வணிகத் தலைவர் என்றும், அவர் ஒரு அசாதாரண மனிதர் என்றும் குறிப்பிட்டார். இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனத்திற்கு அவர் நிலையான தலைமையை வழங்கியதாகவும் குறிப்பிட்டார். அவரது மறைவு தனக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேபோல் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அவர், நமது பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு அவர் மகத்தான பங்களிப்பை ஆற்றியதாக தெரிரிவித்தார். மேலும் அவர் இந்திய தொழில்துறையின் டைட்டன் என்றும் குறிப்பிட்டார். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், "பிரபல தொழிலதிபரும், உண்மையான தேசியவாதியுமான ரத்தன் டாடா மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தார். தேசத்தின் வளர்ச்சிக்காக தன் வாழ்வை அர்ப்பணித்த ரத்தன் டாடா நமது நாட்டின் நலனுக்கான செய்த அர்ப்பணிப்பு தன்னை வியப்பில் ஆழ்த்தியதாக தெரிவித்தார், மேலும் டாடா குழுமத்திற்கும் அவரது எண்ணற்ற ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.

ரத்தன் டாடா மறைவுக்கு மக்களைவை எதிர்கட்சித்தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்தார். தனது எக்ஸ் தள பதிவில்,  ரத்தன் டாடா தொலைநோக்கு பார்வை கொண்ட மனிதர் என்றும், அவர் வணிகம் மற்றும் தொண்டு ஆகிய இரண்டிலும் நீடித்த முத்திரையை பதித்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடாவின் மறைவு வருத்தமளிப்பதாக தெரிவித்தார். மேலும் இந்திய தொழில்துறையின் தலைசிறந்த தலைவராகவும், பொதுநலம் மிக்க மனிதராகவும் இருந்த அவரது மறைவு ஈடு செய்ய முடியாதது என்றும், இந்திய வணிகத்திற்கும் சமூகத்திற்கும் இழப்பு என்றும் தெரிவித்தார்.

இதனிடையே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "உலகம் முழுவதும் தனது புகழ்பெற்ற சாதனைகள் மூலம் நாட்டின் மதிப்பை உயர்த்திய டாடா குழுமத்தின் தலைவரும், தொழிலதிபருமான ரத்தன் டாடா, உலகத்திடம் விடைபெற்றதாக வேதனை தெரிவித்தார்.


varient
Night
Day