பிரயாக்‍ராஜில் கோலாகலமாக நடைபெறும் 6 வார கால மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளா இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் திரிவேணி சங்கமத்தில் அலைகடலென மக்கள் குவிந்து புனித நீராடி வருகின்றனர்.

பிரயாக்‍ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் கடந்த மாதம் 13ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்பமேளாவில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த கோடிக்கணக்கான பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு மேற்கொண்டு வந்தனர். 

6 வார கால மகா கும்பமேளா, மகா சிவராத்திரி நாளான இன்றுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு அதிகாலை முதலே அலைகடென பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்து புனித நீராடி வருகின்றனர். அவர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதுவரை 65 கோடி பக்தர்கள் புனித நீராடிய நிலையில், விழாவின் கடைசி நாள் என்பதால் இன்று மட்டும் கோடிக்கணக்கானோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு அங்கு விரிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உத்தரப்பிரதேச அரசு மேற்கொண்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று மாலை 4 மணி முதல் பிரயாக்ராஜ் முழுவதும் வாகனங்கள் செல்ல தடை விதிக்‍கப்பட்டுள்ளது. பக்‍தர்களின் பாதுகாப்புக்‍காக 10 ஆயிரத்துக்‍கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களை தவிர தேசிய பேரிடர் மீட்பு குழு, மத்திய துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

பக்‍தர்களின் வசதிக்‍காக வடகிழக்‍கு ரயில்வே கூடுதலாக 60 ரயில்களை இயக்கி வருகிறது.  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மகா கும்பமேளா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கவனித்து வருகிறார். மகா சிவராத்திரி மற்றும் மகா கும்பமேளா நிறைவையொட்டி பக்தர்கள் குவிந்து வருவதால் பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. 
 


Night
Day