எழுத்தின் அளவு: அ+ அ- அ
பீகார் மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்குள் 5 பாலங்கள் இடிந்து விழுந்திருப்பது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் மக்கள் வரிப் பணம் பல கோடி ரூபாய் வீணாகி இருப்பதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழுந்துள்ளது. பீகாரில் பாலம் இடிந்து விழுவது தொடர் கதையாகி வருவது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு ...
பட்ட காலிலேயே படும் என்பதற்கு உதாரணமாக பீகார் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது பாலம் இடிந்து விழும் சம்பவங்கள். கடந்த 19ம் தேதி இதை ஆரம்பித்து வைத்தது அங்குள்ள அராரா மாவட்டம். குர்சகந்தா மற்றும் சிக்தி பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 12 கோடி ரூபாய் செலவில் பக்ரா ஆற்றின் மேல் பாலம் ஒன்று கட்டப்பட்டிருந்தது. ஆற்றில் நீர் வேகமாக ஓடிக் கொண்டிருந்த நிலையில், திறப்பு விழாவுக்கு முன்பே திடீரென அந்த பாலம் இடிந்து விழுந்தது.
எப்போதாவது நிகழும் நிகழ்வு இது என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அடுத்த 3 நாட்களில் அதாவது கடந்த 22ம் தேதி மற்றொரு சம்பவம் அரங்கேறியது. இந்த முறை பாலம் இடிந்து விழுந்தது சிவான் மாவட்டத்தில். ராம்கர்கா பஞ்சாயத்துக்கு உள்பட்ட தரூண்டா பகுதியில் கால்வாய் ஒன்றின் மேல் இருந்த 100 மீட்டர் நீளமுள்ள 30 ஆண்டுகளுக்கு முந்தைய பாலம் இடிந்து விழுந்தது. அண்மையில் தூர்வாரப்பட்ட அந்த கால்வாயில் ஓடிய நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாலம் இடிந்து விழுந்தது.
சிவான் சம்பவத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் அடுத்த ஒரு பாலம் தன்னுடைய ஆயுளை முடித்துக் கொண்டது. கடந்த 23ம் தேதி கிழக்கு சம்பரான் மாவட்டம் மோதிஹாரியில் உள்ள அம்வான் கிராமத்தை, மாவட்டத்தின் பிற பகுதிகளுடன் இணைப்பதற்காக ஒன்றரை கோடி ரூபாய் செலவில் 16 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்டுக் கொண்டிருந்த சிறிய பாலம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது.
ஒரு வாரத்துக்குள் நடந்த இந்த 3வது சம்பவம் இத்தோடு முடியவில்லை. கடந்த 27ம் தேதி கிஷான்கஞ்ச் மாவட்டத்தில் பாலம் ஒன்று தரைமட்டமானது. பகதூர்கஞ்ச் மற்றும் திகால்பங்க் பகுதிகளை இணைக்க, மரியா ஆற்றின் மேல் கடந்த 2011ம் ஆண்டு கட்டப்பட்ட 70 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பாலம், கன மழையால் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாலத்தின் ஒரு தூண் இடிந்து விழுந்த சிறிது நேரத்தில் ஒட்டு மொத்த பாலமும் ஆற்றில் நீரில் விழுந்தது.
கடந்த 10 நாட்களுக்குள் 5வது சம்பவமாக, மதுபானி மாவட்டம் மாதேபூர் பகுதியில் 3 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த 70 மீட்டர் நீள பாலத்தின் தூண் கடந்த வெள்ளிக் கிழமை இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்த நிலையில் புதாஹி ஆற்றின் மேல் கட்டப்பட்டு வந்த இந்த பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
பீகாரில் கடந்த 10 நாட்களுக்குள் அடுத்தடுத்து 5 பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வந்தாலும், மக்கள் வரிப் பணம் வீணாவதற்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்வி எழாமல் இல்லை. அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்த தொடர் சம்பவங்கள், பீகார் மாநில பொதுப்பணிகளின் தரம் குறித்த விவாதத்தையும் நாடு முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.