பீகார் : பாஜக ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகிறார் நிதிஷ்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகார் மாநில முதலமைச்சர் பதவியை ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ராஜினாமா கதடித்தை வழங்கியுள்ள நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆதரவுடன் மீண்டும் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். 

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மஹாகத்பந்தன் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்தியா கூட்டணியிலும் ஐக்கிய ஜனதா தளம் நீடித்து வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீட்டில் நிதிஷ்குமாருக்கு அதிருப்தி ஏற்பட்டது.

இந்நிலையில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன், நிதிஷ்குமார் கூட்டணி அமைக்கப்போகிறார் என செய்திகள் வலம் வந்தன.

அதற்கேற்றார்போல் ஐக்கிய ஜனதா தளம், ஆர்.ஜே.டி, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியே எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை நடத்தி வந்ததால் பீகாரில் கடந்த சில நாள்களாகவே அரசியல் குழப்பம் நீடித்து வந்தது.

இந்நிலையில் இன்று காலை ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஆட்சி அமைப்பது தொடர்பான முடிவுகளை எடுக்க முழு அதிகாரம் அளித்து முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து காலை 11.00 மணியளவில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ஆளுநர் மாளிகைக்கு வருகை தந்தார். அங்கு ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் அளித்த நிதிஷ்குமார், மீண்டும் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார். 

இதையடுத்து இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சராக நிதிஷ்குமார் மீண்டும் பதவியேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள பதவி ஏற்பு விழாவில், துணை முதலமைச்சர்களாக பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி உள்ளிட்ட இருவர் பதவியேற்பார்கள் என்றும் சபாநாயகர் பதவி பா.ஜ.க.வுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day