எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நீண்ட இழுபறிக்குப் பின், தலைநகர் டெல்லியின் புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரின் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகி 11 நாட்கள் ஆன நிலையிலும் டெல்லியின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு இதுவரை பாஜகவில் பதில் இல்லாத சூழல் நிலவுகிறது. ஆட்சியை இழந்த ஆம் ஆத்மியும் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது.
இந்த நிலையில், 2 முறை ஒத்திவைக்கப்பட்ட டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் கட்சியின் தேசியப் பார்வையாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு, இன்று மாலைக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. முதலமைச்சர் பதவிக்கு பர்வேஷ் வர்மா, ரேகா குப்தா, விஜேந்தர் குப்தா உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது.
அதேநேரத்தில், முதலமைச்சர் தேர்வு இழுபறியாக இருந்தாலும், நாளை பதவியேற்பு விழா என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. அதன்படி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பதவியேற்புக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதே அந்தப் பகுதி முழுவதும் போலீசார் மற்றும் துணை நிலை ராணுவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாளை மாலை 4:30 மணியளவில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிகள் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே பாஜகவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில், முதல் முறையாக டெல்லி முதலமைச்சரைத் தீர்மானிக்கும் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரைத் தேர்வு செய்யும் புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்திற்கான 'பார்வையாளர்களை' முடிவு செய்ய பாஜகவின் உயர் அதிகாரம் கொண்ட ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் இன்று பிற்பகலில் கூட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை தாங்க உள்ளார் எனக் கூறப்படுவதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.