புதுச்சேரியில் ஓய்ந்தது பரப்புரை - நாளை வாக்குப்பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான சூறாவளி தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதனையடுத்து, நாளை வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. 

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பரப்புரையில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக இருந்தது...

தங்கள் கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், தேசிய தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். குறிப்பாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட தேசிய தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு பரப்புரையில் ஈடுபட்டதால் தேர்தல் பரப்புரை களைக்கட்டியது. இந்நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 76 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கரூர் தொகுதியில் அதிகபட்சமாக 54 வேட்பாளர்களும், நாகப்பட்டினத்தில் குறைந்தபட்சமாக 9 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஒரே ஒரு மக்களவைத் தொகுதியை கொண்ட புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம், பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் உள்ளிட்ட 19 சுயேச்சைகள் உட்பட 26 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

Night
Day