புதுச்சேரியில் முழு அடைப்புப் போராட்டம் - மறியலில் ஈடுபட்டவர்கள் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

புதுச்சேரியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ம் தேதி மின் கட்டண உயர்வு அறிவிக்கப்படும் நிலையில், இந்த முறை நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தாமதமானது. இந்நிலையில், கடந்த ஜூன் 16ம் தேதி முதல் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், வீட்டு உபயோக மின்சாரத்திற்கு 40 முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஆளும் பாஜக கூட்டணி அரசை கண்டித்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி, குபேர் அங்காடி, நேரு வீதி, அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, காமராஜ் வீதி உள்ளிட்ட நகரம் மற்றும் கிராமப்புறங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திரையரங்குகளிலும் பகல் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. முழு அடைப்பு காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரசு சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டது.

இதேபோல், காரைக்காலிலும் நகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பிரதான சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. பேருந்துகள் மிக குறைவாக இயக்கப்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். போராட்டம் காரணமாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day