புதுச்சேரி சிறுமி கொலை : காவல்துறை உயரதிகாரிகளுடன் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் ஆலோசனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்கி உள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகர் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த 2-ம் தேதி மதியம் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் கடந்த செவ்வாய் கிழமை சிறுமியின் உடல் வீட்டின் அருகே உள்ள சாக்கடையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் பலரது நெஞ்சையும் உலுக்கியது. 
இது தொடர்பாக 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் 57 வயதான விவேகானந்தன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கொலை செய்தது தெரியவந்தது. 

இந்த நிலையில், சிறுமி கொலை வழக்கில் முழு விசாரணை நடத்த, ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்புக் குழு ஒன்றை புதுச்சேரி அரசு நேற்று அமைத்தது. இதையடுத்து சிறுமி கொலை வழக்கு ஆவணங்களை சிறப்புக் குழு பெற்றுக்கொண்டு, விசாரணையை இன்று காலை தொடங்கியுள்ளது. சந்தேகத்தின் பேரில் போலீஸ் காவலில் இருக்கும் மற்ற 5 நபர்களிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் குற்றவாளிகள் 2 பேர், சந்தேகத்தின் பேரில் விசாரணையில் உள்ள 5 பேரின் ரத்த மாதிரிகள், ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே  சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், டிஜிபி மற்றும் டிஐஜி ஆகியோர் உடன் ஆளுநர் மாளிகையில் அவசர ஆலோசனை நடத்தினார். சிறுமி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்டதாக கூறி முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய காவல்துறை தலைமையகம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.


Night
Day