புதுச்சேரி : சிறுமி கொலை வழக்கு - 4 பேரிடம் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமி 3 நாட்களுக்கு பின் வீட்டின் அருகே துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. விளையாட சென்ற சிறுமி கொல்லப்பட்டது குறித்து விரிவாக பார்க்கலாம்.

புதுச்சேரி சோலை நகரை சேர்ந்தவர் நாராயணன், இவரது மனைவி மைதிலி. இவர்களது 9 வயது மகளான ஆர்த்தி, அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சனிக்கிழமை மதியம் தனது வீட்டின் அருகே விளையாட சென்ற சிறுமி ஆர்த்தி, நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இதையடுத்து, அவரது பெற்றோர் மற்றும் உறவினா்கள் சிறுமியின் தோழிகளின் வீடுகளில் தேடியும் எங்கேயும் கிடைக்காததால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இதுதொடர்பாக முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், 5 தனிப்படைகள் அமைத்து மாயமான சிறுமி ஆர்த்தியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சோலைநகர் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த அனைத்து கண்காணிப்பு கேமராவையும் போலீசார் ஆய்வு செய்ததில், சிறுமி ஆர்த்தி சோலைநகரில் இருந்து வெளியே நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, போலீசார் அந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

சிறுமி மாயமானது தொடர்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமையே காவல் நிலையத்தில் புகாரளித்தும் எந்த தகவலும் கிடைக்காததால் பெற்றோர் கலக்கமடைந்தனர். இதனையடுத்து, மாயமான சிறுமியை கண்டுபிடிப்பதில் காவல்துறை மெத்தனமாக செயல்படுவதாக கூறி  முத்தியால்பேட்டை மணிக்கூண்டு அருகே சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டத்தை கைவிட்டனர். 100க்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதோடு, 1 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் சிறுமி காணாமல் போய் 3 நாட்கள் கழித்து செவ்வாய்கிழமை மதியம் வீட்டின் அருகே உள்ள கால்வாயில், துணியால் சுற்றப்பட்ட மூட்டையில் சடலமாக மீட்கப்பட்டார். 

சிறுமி மாயமான தினத்தன்று, அப்பகுதியில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையொட்டி, சிலர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வீடு வீடாக பணம் கேட்டு வந்துள்ளனர். அவ்வாறு வந்தவர்களின் பின்னால் சிறுமி சென்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மயானக் கொள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அவர்களுக்கும் சிறுமி காணமால் போனதற்கும் தொடர்பு இல்லை என தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சில கஞ்சா போதை கும்பலிடம் போலீஸ் விசாரணை மேற்கொள்ள முயற்சித்த போது, அவர்கள் தங்கள் கையை அறுத்துக்கொண்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுமி காணாமல் போனது குறித்த விசாரணையில் தோய்வு ஏற்பட்டது. 

இதனிடையே சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட 6 அடி ஆழம் கொண்ட கால்வாய், சேறும் சகதியுமாக இருந்த நிலையில், சேற்றில் சிக்கிய சிறுமியின் சடலம், பின்னர் மிதக்கத் தொடங்கியதால், மாயமான அன்றே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. சிறுமியின் உடல் துணியால் இறுக கட்டப்பட்டிருந்ததால், அதனை அங்கு பிரிக்காமல் உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முடிவெடுத்த போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியின் உடலை எடுத்து செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடுமையாக தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

சிறுமி கொலை தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் முதியவர் உள்பட 4 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், புதிதாக கிடைத்த சிசிடிவி பதிவு  ஒன்றில், தெருவில் நடந்து செல்லும் சிறுமி திடீரென ஓடுவது போல் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே சிறுமி கொலை விவகாரத்தில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், எம்.ஜி.ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், துணை ராணுவம் வரவழைக்கப்பட்டது. அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறியும் கலைந்து செல்லாததால், போலீசார் லேசான தடியடி நடத்தி கலைக்க முற்பட்டனர். இருப்பினும் அவர்கள் கலைந்து செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்ததால் பதற்றமான சூழல் நிலவியது.

துக்கம் தாங்காத சிறுமியின் தந்தை "இதுவரை தனது குழந்தையை கட்டி போட்டது கூட கிடையாதே".... "அநியாயமாய் எனது குழந்தையின்  கை கால்களை கட்டிபோட்டு கொன்று விட்டார்களே"  இதற்காகவா கஷ்டப்பட்டு எனது குழதையை வளர்த்தேன் என்று கதறி அழுததோடு, எனது  குழந்தையை கொன்றவர்களை விட்டுவிடாதீர்கள் என காவல்துறையினரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

சிறுமி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Night
Day