எழுத்தின் அளவு: அ+ அ- அ
விண்ணிலிருந்து பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் பூமியை தங்களது சொந்த உலகமாக உணரவே பல நாட்கள் ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 9 மாதங்களை விண்வெளியில் கழித்த விஞ்ஞானிகள், பூமியில் எதிர்கொள்ளவிருக்கும் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
8 நாட்கள் ஆய்வுக்காக விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர், 9 மாதங்களுக்கு பிறகு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் தசை சிதைவு, எலும்பு சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ள கூடும் என்று நாசா கூறியுள்ளது. விண்வெளியில் குறைவான புவி ஈர்ப்பு விசையில் பல மாதங்களாக வாழ்ந்து பழகிய விஞ்ஞானிகளுக்கு, பூமியில் வாழ்வது சில மாதங்கள் மிகவும் சவாலானதாக இருக்கும். பூமியில் இயல்பாக எழுந்து நிற்கவும், மற்ற வேலைகள் செய்வதற்கும் சில மாதங்கள் வரை ஆகலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சில மாதங்களுக்கு பிறர் உதவியின்றி எழுந்து நிற்பதோ, நடப்பதோ ஆபத்து என்றும் எச்சரிக்கின்றனர். எலும்புகளின் அடர்த்தி குறைந்து பலவீனமாக மாறியிருக்கும் என்பதால் சமநிலை தவறி கீழே விழும் பட்சத்தில் எளிதில் எழும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். ஓராண்டு வரை பார்வைக்குறைபாடு ஏற்படவும் வாய்ப்புள்ளதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். நீண்ட மாதங்களுக்கு பிறகு புவி ஈர்ப்பு விசையை உணர்வதால் அவர்கள் உடல் மலையளவு கனப்பதை போல உணர்வார்கள் என்றும் தங்களின் எடை தாங்காமல் கிழே விழுவார்கள் என்றும் கை, கால்கள் அசைப்பது கூட பெரும் எடையை தூக்கி இறக்குவது போல இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
மெத்தையில் படுத்தால் கூட பாதாளத்தில் விழுவது போல இருக்கும் என்றும் யாரோ ஒருவர் அழுத்துவதை போல உணர்வார்கள் என்றும் அவர்களின் ரத்த ஓட்டம் சமநிலை பூமியில் இயல்புநிலைக்கு மாறும் போது படபடப்பு, தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படலாம். இதயம் முன்பை விட வேகமாக துடிக்க ஆரம்பிக்கும் என்றும் கூறுகின்றனர் மருத்துவர்கள். விண்வெளியில் எடை இல்லாத மிகக்குறைந்த அளவில் சிறப்பு உணவுகளை சாப்பிட்டு விட்டு, பூமியின் சாதாரண எடை கொண்ட உணவுகளை சாப்பிடுவது கடினமாக இருக்கும் என்றும் வயிற்றுக்குள் வேகமாக உணவு செல்வதை போல இருக்கும் எனவும் தெரிவிக்கும் மருத்துவர்கள், உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு ஆகியவை சில காலம் ஒவ்வாமையில் இருக்கலாம் என்றும் குறிப்பிடுகின்றனர்.
அடிக்கடி மன அழுத்தம் ஏற்படும் என்றும் மக்கள் கூட்டம், இரைச்சல் எல்லாம் மிக அதிகமாக இருப்பதை போன்று தோன்றும் என தெரிவித்துள்ள மருத்துவர்கள் இதற்கு சில மாதங்கள் சிகிச்சை மற்றும் பயிற்சிக்கு பின்னரே இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் என்றும் கூறுகின்றனர்.
மன உறுதியுடன் 9 மாதங்கள் விண்வெளியில் கழித்த சுனிதா வில்லியம்ஸ், உடல் ரீதியிலான சவால்களையும் சாதாரணமாக எதிர்கொள்வார் என்பதில் மாற்று கருத்து இல்லை.