எழுத்தின் அளவு: அ+ அ- அ
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
கடந்த 3 நாட்களுக்கு மேலாக பெங்களூரில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக, ஏரிகள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்திருந்ததாலும், நீர் நிலைகளை ஆக்கிரமித்து வீடுகளும், கட்டிடங்களும் கட்டப்பட்டிருப்பதாலும் வெள்ளம் தேங்கி நிற்கிறது. கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள நீரில் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூழ்கிக் கிடக்கின்றன. கனமழைக்கு தாக்குப் பிடிக்காமல் மரங்கள் சாய்ந்து வாகனங்கள் மீது விழுந்தன. பல இடங்களில் சாலைகளில் இடுப்பளவு தேங்கியுள்ள தண்ணீரால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று பெய்த கனமழை காரணமாக பெங்களூரில் வரலாறு காணாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, எலக்ட்ரானிக் சிட்டியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக மக்கள் தங்கள் வாகனங்களிலேயே காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. எலக்ட்ரானிக் சிட்டி பாலத்தின் ஒரு பகுதியில் மழை நீர் தேங்கியதால், நகருக்குள் வரும் பாதை மூடப்பட்டது. இதன் காரணமாக, அலுவலகங்களிலிருந்து வீடு திரும்ப முயன்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.