போப் ஃபிரான்சிஸ் இறுதிச்சடங்கு... வாடிகனில் குவிந்த உலகத் தலைவர்கள்....

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

போப் ஃபிரான்சிஸின் இறுதிச்சடங்கு இந்திய நேரப்படி இன்று பிற்பகல் வாடிகனில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெற உள்ளது. இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு...

கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் கடந்த 21ஆம் தேதி அன்று காலை தனது 88 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து ரோமில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவில் மர சவப்பெட்டியில் பாரம்பரிய உடையுடன் போப் பிரான்சிஸ் உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்கிற்கு முன்னதாக புதன் மற்றும் வியாழக் கிழமை வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போப் பிரான்சிஸ் உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பொதுமக்களின் அஞ்சலியை தொடர்ந்து, இந்தியநேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இறுதிச் சடங்கு வழிபாட்டு முறை கார்டினல்கள் கல்லூரியின் டீனால் வழிநடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இறுதிச்சடங்கு திருப்பலியில் பங்கேற்க உலகம் முழுவதிலுமிருந்து ஆயர்கள், கார்டினல்கள் மற்றும் பாதிரியார்கள் வாடிகனில் குவிந்துள்ளனர்.

தொடர்ந்து போப் பிரான்சிஸின் இறுதி விருப்பத்தின்படி, புனித பீட்டர்ஸ் சதுக்கத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புனித மேரி மேஜர் பசிலிக்காவிற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக போப் பிரான்சிஸ் உடல் சாண்டா மரியா மாகியோரில் உள்ள ஒரு எளிய நிலத்தடி கல்லறையில் அடக்கம் செய்யப்பட உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் வாடிகனுக்கு வெளியே அடக்கம் செய்யப்படும் முதல் போப்பாண்டவர் இவர்தான் என்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, போப்பின் இறுதிச் சடங்கில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஏற்கனவே வாடிகன் சென்று விட்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் ஆகியோர் இறுதிச் சடங்கில் பங்கேற்கின்றனர். மறைந்த போப்பின் சொந்த நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலே,  பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா மற்றும் அவரது மனைவி ஜான்ஜா ஆகியோர் பங்கேற்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இளவரசர் வில்லியம், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், உக்ரைன் அதிபர்  ஜெலென்ஸ்கி, அயர்லாந்து அதிபர் மைக்கேல் ஹிக்கின்ஸ், ஸ்பெயின் மன்னர் பெலிப் VI மற்றும் ராணி லெடிசியா, போலந்து அதிபர் ஆண்ட்ரெஜ் டுடா, பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர், ஹங்கேரி அடிதிபர் தமாஸ் சுலியோக் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் இறுதிச் சடங்கில் கலந்து கொள்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 25 லட்சம் பேர் வரை வாடிகனில் குவிவார்கள் என  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

Night
Day