எழுத்தின் அளவு: அ+ அ- அ
மிகந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என இரண்டு பெரிய மாநில கட்சிகள், இரு பிரிவாக பிரிந்து போட்டியிட்டதற்கான காரணம் என்ன? இத்தேர்தல் யுத்தத்தில் வெற்றி வாகை சூடி அரியணை ஏறப்போவது யார்? என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
நாட்டின் வர்த்தக மாநிலம் என்று அனைவராலும் அரியப்பட்டது மகாராஷ்டிரா. 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்து. இத்தேர்தலில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகியவை மஹாயுதி கூட்டணியிலும், மறுபுறம் காங்கிரஸ், சரத் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா ஆகியவை மஹா விகாஸ் அகாடி கூட்டணியில் களம்கண்டுள்ளன.
பாஜகவும், காங்கிரசும் பரம எதிரிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கே ஈடுகொடுக்கும் விதமாக தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவின் இரு பிரிவுகள் தற்போது உருவெடுத்துள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் மராட்டியர்களுக்கே என்ற முழக்கத்துடன் கடந்த 1996ம் ஆண்டு துவங்கப்பட்ட சிவசேனா கட்சி, தற்போது வரை அம்மாநிலத்தில் அசைக்க முடியாத கட்சியாக நிலைத்துக்கொண்டிருக்கிறது. 25 ஆண்டுகள் பாஜக கூட்டணியில் இருந்த சிவசேனா, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் களம்கண்டு அமோக வெற்றிபெற்று அக்கட்சியின் தலைவராக இருந்த உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும் பதவியேற்றார். இக்கட்சியில் முக்கிய அங்கம் வகித்த ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் கொள்கை மீது முழு ஈடுபாடு கொண்டிருந்ததால், தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களை சேர்த்து, பாஜக தலைமையில் கூட்டணி அமைத்து கடந்த 2022ம் ஆண்டு முதலமைச்சராகவும் பதவியேற்றார். கையில் இருந்த ஆட்சியையும், கட்சியையும் கை நழுவவிட்ட உத்தவ் தாக்கரே, உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தும் பலனில்லாமல் கானல் நீரானது.
மறுபுறம் கடந்த 1998ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி தலைவராக, இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி பொறுப்பேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்த சரத்பவார், 1999ம் ஆண்டு புதியதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கி, அக்கட்சிக்கு தலைவராக தன்னை நியமித்துக்கொண்டார். நாளடைவில் காங்கிரஸ் கட்சியுடன் மீண்டும் நெருக்கம் காட்டிய சரத்பவார், அக்கட்சியின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியுடன் பல முறை மகாராஷ்டிரா முதலமைச்சராகவும் அரியணை ஏறினார். இவரின் அண்ணன் மகனான அஜித்பவார், தேசியவாத காங்கிரசில் முக்கிய அங்கமாக திகழ்ந்த நிலையில், பாஜகவின் கொள்கையில் ஈர்க்கப்பட்டதால், கடந்த 2023ம் ஆண்டு தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களை சேர்த்து, பாஜக கூட்டணியில் சேர்ந்து துணை முதலமைச்சர் பதவியையும் பெற்றுக்கொண்டார். அத்துடன் கட்சியையும் தன்வசப்படுத்தினார்.
மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய இரண்டு மாநில கட்சிகளாக திகழ்ந்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இரண்டு பிரிவாக பிரிந்த பின்னர், நடைபெற்ற முதல் சட்டப்பேரவை தேர்தல் என்பதால், தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்க இக்கட்சிகளின் தலைவர்கள் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டனர். இவற்றில் காங்கிரஸ் கட்சி கூட்டணி தலைவர்கள், மதம், ஜாதி போன்றவற்றால் பாஜக பிளவு வாத அரசியலை கையில் எடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியதுடன், மக்களை வியப்பில் ஆழ்த்தும் விதமாக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசினர்.
மறுபுறம், பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள், தலித், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களை காங்கிரஸ் கூட்டணி அவமதிப்பதாகவும், மக்களின் நலனை பற்றி யோசிக்காமல், பதவிக்காக காங்கிரஸ் கூட்டணி போட்டி போட்டுக்கொண்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினர். மேலும், இதுவரை எவரும் வழங்க முடியாத அளவிற்கு பல தேர்தல் வாக்குறுதிகளையும் பாஜக கூட்டணி அள்ளி வீசியது.
அனைத்து கட்சியினரின் தீவிர பிரச்சாரத்தின் எதிரொலியாக, மகாராஷ்டிரா வாக்குப்பதிவு வரலாற்றில், இந்தாண்டு 65 சதவீதமாக பதிவாகியது. இவை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடைபெற்ற அன்றே வெளியிடப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில், பெரும்பாலும் பாஜக - ஏக்நாத் ஷிண்டே பிரிவு சிவசேனா - அஜித் பவார் பிரிவு தேசிய வாத காங்கிரஸ் அடங்கிய மஹாயுதி கூட்டணியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளன.
அதே சமயம், காங்கிரஸ் - உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா - சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மஹா விகாஸ் கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாக ஒரு சில நிறுவனங்களின் கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளன. இதனால், நாளைய மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகளை கட்சிகள் மட்டுமின்றி, இந்தியாவே எதிர்நோக்கி காத்திருக்கிறது.