எழுத்தின் அளவு: அ+ அ- அ
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
நாட்டின் செல்வ வளம் மிக்க மாநிலங்களில் ஒன்றான மகாராஷ்டிரா, பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள் தொகையில் 2வது மாநிலமாகவும் உள்ளது. அங்கு மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
ஆளும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாதி கூட்டணியும் இந்த தேர்தலில் மோதின.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த மக்களவைத் தேர்தல், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணிக்கு மிகப் பெரிய நம்பிக்கையை தந்தது. மொத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில் மகா விகாஸ் அகாதி 30 தொகுதிகளை கைப்பற்றியது. மறுபக்கம் மகாயுதி கூட்டணி 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக கூட்டணிக்கு எதிரான அதிருப்தி காரணமாகவே மக்களவை தேர்தலில் போதிய ஆதரவு கிட்டவில்லை என்ற விமர்சனம் இதைத் தொடர்ந்து எழுந்தது. இதனால், சட்டப்பேரவை தேர்தல் மகாயுதி கூட்டணிக்கு பின்னடைவாக இருக்கும் என்ற கருத்துக்கள் எழுந்த நிலையில், ஒரு இமாலய வெற்றியை சட்டப்பேரவை தேர்தலில் பதிவு செய்து மிரள வைத்துள்ளது பாஜக கூட்டணி. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறினாலும், இவ்வளவு பெரிய வெற்றி கிடைக்கும் என்று யாரும் கணிக்கவில்லை.
மக்களவை தேர்தலில் பின்னடைவை சந்தித்த மகாயுதி கூட்டணி, சட்டப்பேரவை தேர்தலில் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றதற்கு முக்கியமாக பார்க்கப்படுவது பெண்கள் ஆதரவு. மகளிருக்காக பாஜக கூட்டணி கொண்டுவந்த லட்கி பெஹின் யோஜனா என்ற திட்டத்தால் பெண்களின் ஆதரவு பெருகியது.
4.6 கோடி பெண் வாக்காளர்கள் உள்ள மகாராஷ்டிராவில், லட்கி பெஹின் யோஜனா என்னும் பெண் சக்தி திட்டத்தால், பெண்களின் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்துவிட்டது பாஜக கூட்டணி. 21 வயது முதல் 65 வயது வரையிலான ஏழை மற்றும் நடுத்தர வர்க்க பெண்களுக்கு மாதந்தோறும் 1,500 ரூபாய் வழங்கும் இந்த திட்டம் பெண் வாக்காளர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த உதவித் தொகை 2,100 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் மகாயுதி கூட்டணி அறிவித்தது. இதன் காரணமாக, பெண்கள் ஆதரவு பாஜக கூட்டணிக்கு பெருகியது. அடுத்ததாக மராத்தா சமூகம் முன்வைத்த இடஒதுக்கீடு கோரிக்கைக்கு பாஜக சாதகமாக செயல்பட்டது. இதன் காரணமாக மராத்தா சமூகம் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் பெரிய அளவில் தொகுதிகளை கைப்பற்றியுள்ளது மகாயுதி கூட்டணி. மராத்தா அல்லாத பிற ஓபிசி சமூகங்களின் நலன்களுக்கான திட்டங்களையும் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக முன்வைத்ததும் அந்த கூட்டணிக்கு பெரிய அளவில் உதவியது.
இதற்கு எதிர்மாறாக மகா விலாஸ் அகாதி கூட்டணியில் உள்ள காங்கிரசின் பிரச்சாரம் பெரிய அளவில் எடுபடவில்லை என்பதையே இந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தியுள்ளது. சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் உடைந்த பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் என்பதால், இந்த தேர்தல் முடிவுகள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி பார்க்கையில், உண்மையான சிவசேனா ஏக்நாத் ஷிண்டேவிடமும், உண்மையான தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரிடமும் தான் இருக்கிறது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தேர்தல் முடிவு அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். ஆகமொத்தத்தில் இந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், ஏக்நாத் ஷிண்டேவுக்கும், அஜித் பவாருக்கும் பெரும் உற்சாகத்தை வாரி வழங்கியுள்ள நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கும், சரத் பவாருக்கும் மிகப் பெரிய பின்னடைவு என்பதை மறுக்க முடியாது.