எழுத்தின் அளவு: அ+ அ- அ
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நடைபெற்ற பொருளாதார முறைகேடுகள் குறித்த வெள்ளை அறிக்கையை மக்களவையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
2014 ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியின் போது பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்ததாகவும், அதற்கு பிறகு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி பொறுப்பேற்றவுடன் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் மோசமான 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது என்றும், தற்போது உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் உலகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் 3வது மிகப்பெரிய நாடாக இந்தியா வளர்ந்துள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் இந்திய பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்ததாக தெரிவித்தார்.
ஊழல் நிறைந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளை காங்கிரஸ் ஆட்சியில் தான் நடத்தப்பட்டது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த ஆண்டு ஜி-20 மாநாட்டிற்கான தலைமை பொறுப்பை இந்திய வகித்தது எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய ஊழலாக 2ஜி ஊழல் நடந்தது என குறிப்பிட்ட நிர்மலாசீதாராமன், தற்போது தேசிய ஜனநாயக ஆட்சியில் உலகின் மிக வேகமான 5ஜி இணைய சேவையை வழங்கி வருவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிலக்கரி ஊழல், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு தங்க இறக்குமதிக்கான உரிமம் வழங்கப்பட்டது என அனைத்து ஊழல்களும் காங்கிரஸ் ஆட்சியில் தான் நடைபெற்றதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியின் போது 2 இலக்கங்களில் இருந்த பணவீக்கம் தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.