எழுத்தின் அளவு: அ+ அ- அ
தொழிலதிபர் அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
சூரிய மின்சாரம் விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், சூரிய ஒளி மின் உற்பத்தி முதலீட்டாளர்களை ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதானி குழுமம் மீது அமெரிக்காவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அதானிக்கு நியூயார்க் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தன் மீதும் தனது நிறுவனம் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக அதானி தெரிவித்து வருகிறார். இதனிடையே, அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால், அந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை கூடிய நாடாளுமன்றத்தில், தொழிலதிபர் அதானி மீதான லஞ்ச புகார் தொடர்பாக விவாதம் நடத்த எதிர்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கு மக்களவை தலைவர் அனுமதி மறுத்தை கண்டித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் அவையில் குச்சல் குழப்பம் நிலவியது.
இதனால் அவையை நடத்த முடியாமல், மக்களவை தலைவர், அவையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைத்தார்.