எழுத்தின் அளவு: அ+ அ- அ
பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார். ஆரம்ப நிலையிலேயே மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க் கட்சிகள், மசோதாவை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின.
மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு கடந்த மார்ச் மாதம் தனது அறிக்கையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் தாக்கல் செய்தது. இதையடுத்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது பேசிய காங்கிரஸ் எம்பி மணிஷ் திவாரி, இந்த மசோதா கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் உள்ளது என்றும், இந்திய அரசியலமைப்பின் சில அம்சங்கள் இந்த அவையின் திருத்தும் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்பதால் மசோதாக்கள் அறிமுகப்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த மசோதாக்கள் அரசியலைமப்பின் அடிப்படை கோட்பாட்டுக்கு எதிரானது என்று குற்றம் சாட்டிய சமாஜ்வாதி எம்பி தர்மேந்திர யாதவ், இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைக்க சதி நடக்கிறது என்றும் நாட்டின் அனைத்து அடிப்படைகளுக்கும் இந்த மசோதா விரோதி என்றும் கூறினார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, இது தேர்தல் சீர்திருத்தம் அல்ல, தனிப்பட்ட ஒருவருடைய கனவை நிறைவேற்றும் நடவடிக்கை என்று கூறினார். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் சட்டப்பேரவைகளின் சுயாட்சி அதிகாரம் பறிபோகும் என்றும் அவர் எச்சரித்தார். உத்தவ் தாக்கரே சிவசேனா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு முழு ஆதரவு வழங்குவதாக, ஆளும் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் அறிவித்தது. அப்போது பேசிய அமித் ஷா, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பலாம் என்று கூறினார். கூட்டுக் குழு பரிசீலனையின் போது அனைத்து கட்சிகளும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும், நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்பதே பிரதமரின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.
பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக குழு பரிசீலனைக்கு அனுப்ப 269 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். 198 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்படுவது உறுதியாகி உள்ளது.