எழுத்தின் அளவு: அ+ அ- அ
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்தியா கூட்டணியில் கொடிகுன்னில் சுரேசும் களமிறங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், தெலுங்குதேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. இதன் மூலம் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார். புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பதற்கும் மற்றும் சபாநாயகரை தேர்ந்து எடுப்பதற்கும் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுதந்திர இந்தியாவில் இதுவரை ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒருமனதாகவே மக்களவை சபாநாயகரை தேர்வு செய்து வந்த நிலையில், இந்த முறை தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக ஓம் பிர்லா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இந்தியா கூட்டணி சார்பில் கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்பி கொடிக்குன்னில் சுரேஷ் சபாநாயகர் பதவிக்கு களமிறக்கப்பட்டுள்ளார். 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் ஆளும் பாஜக கூட்டணிக்கு 293 உறுப்பினர்கள் உள்ளதால் பாஜக வேட்பாளர் ஓம் பிர்லா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக முன்வந்தால், ஆளுங்கட்சியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை ஆதரிப்போம் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.