எழுத்தின் அளவு: அ+ அ- அ
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி தடையை மீறி ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற மாணவர் அமைப்பினரை போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியடித்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இட ஒதுக்கீடு தொடர்பாக, குக்கி - மெய்தி பிரிவினரிடையே, கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர். இதையடுத்து மணிப்பூரில் இயல்புநிலை படிப்படியாக திரும்பி வந்த நிலையில், அங்கு மீண்டும் வன்முறை சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன. ஜிரிபாம் மாவட்டத்தில் கடந்த 7-ம் தேதி ட்ரோன்கள், ராக்கெட் லாஞ்சர்கள் மூலம் ஆயுதம் ஏந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர்.
இதையடுத்து குக்கி, மெய்தி இன மக்களிடையே மீண்டும் வன்முறை வெடித்த நிலையில், அமைதியை நிலைநாட்டக் கோரியும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கி மாணவர் அமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால், மாணவர் அமைப்பினருக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர் அமைப்பினரை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டியடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.