மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன் - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி கடந்த 17 மாதங்களாக சிறையில் இருந்த டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு இன்று ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை வழக்கில் டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில் நடந்துள்ள பணமோசாடி தொடர்பான வழக்கில் மணீஷ் சிசோடியாவை கடந்த 2023ம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி மாதம் அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது.

இவர் மீதான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஜாமின் கோரிய மனுக்கள் தள்ளுபடியானதை அடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மணீஷ் சிசோடியா  மே 21ம் தேதி மேல்முறையீடு செய்தார். அந்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ஜாமின் மனுவை கடந்த 6ம் தேதி விசாரித்த நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்த நிலையில், இன்று மணீஷ் சிசோடியாவுக்கு நிபந்தனை ஜாமின் அளித்து உத்தரவு பிறப்பித்தனர். 

அதில் மணீஷ் சிசோடியா தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், ஒவ்வொரு திங்கள் கிழமையும் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும், சாட்சிகளை கலைக்க முயற்சிக்கக் கூடாது போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிஷ் சிசோடியாவை சிறையில் அடைப்பது தனிமனித அடிப்படை உரிமையை மீறும் செயல் என்றும் விரைவாக விசாரணை நடத்தக் கோரும் அவரது உரிமையும் நீதிமன்றங்களால் பறிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.


Night
Day