எழுத்தின் அளவு: அ+ அ- அ
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜனஅதிகார சங்கர்ஷ சங்கதனே அமைப்பைச் சேர்ந்த ஆதர்ஷ் ஐயர் என்பவர், தேர்தல் பத்திரங்கள் மூலம் தொழிலதிபர்களிடம் மிரட்டி பணம் பறித்ததாக நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட சிலர் மீது புகார் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தன்னை ராஜினாமா செய்யச் சொன்ன பாஜக தற்போது என்னச் செய்யப் போகிறது எனக் கேள்வி எழுப்பினார். தற்போது நிர்மலா சீதாராமன் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளதால் அவரும் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இந்த வழக்கில் 3 மாதங்களுக்குள் போலீசார் அறிக்கை தாக்கல் செய்வார்கள் எனவும் தெரிவித்தார். பிரச்சினைக்குரிய தேர்தல் பத்திரத் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.