எழுத்தின் அளவு: அ+ அ- அ
உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் நேற்றிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் கொளுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருந்த தீயை கடும் முயற்சிக்கு பின்னர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 37 குழந்தைகளை பாதுகாப்பாக மீட்ட போதிலும், தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. சில குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்திற்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள, மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல்துறை டிஐஜி-க்கும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.