மலையாள திரையுலகம் : பிரபல நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ் உள்ளிட்ட பலர் மீது பாலியல் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து மலையாளத் திரையுலக முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது அடுத்தடுத்து வெளியாகும் பாலியல் குற்றச்சாட்டுகள் கேரள மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகா் திலீப் உள்ளிட்ட சிலா் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கினர். இதையடுத்து மலையாள திரையுலகில் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளதா என ஆய்வு செய்ய, ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் குழுவை கேரள அரசு அமைத்தது. இக்குழு விசாரணை நடத்தி கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்த அறிக்கை, கடந்த வாரம் வெளியானது. அதில் மலையாள திரையுலகில் உள்ள பாலியல் துன்புறுத்தல் குறித்த பல விஷயங்கள் அம்பலப்படுத்தப்பட்டிருந்தது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மலையாளத் திரைப்பட நடிகர் சங்க செயலாளர் சித்திக் மீது ஒரு நடிகை பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். இதையடுத்து சித்திக் பதவி விலகியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடிகை மினு முனீர் என்பவர் பிரபல நடிகர்களான முகேஷ்  ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு, பிரபல இயக்குநர் ரஞ்சித் ஆகியோர் தன்னை பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் தெரிவித்தார். அதேபோல் நடிகர் ரியாஸ்கான் மீதும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் அடுத்ததாக தற்போது விருது பெற்ற நடிகரும் இயக்குநருமான பாபுராஜ் மீது பாலியல் புகார் வெளிவந்துள்ளது. துணை நடிகையான அவர், கதாபாத்திரம் குறித்து பேச வேண்டும் என வீட்டிற்கு அழைத்து பாபுராஜ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டு பொய் எனத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மலையாளத் திரையுலக பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக விசாரணை நடத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட 7 பேர் கொண்ட சிறப்புக் குழுவை முதலமைச்சர் பினராயி விஜயன் அமைத்துள்ளார். இதுவரை தங்களை அடையாளம் காட்டாமல் பேட்டி கொடுத்து வரும் பாதிக்கப்பட்ட நடிகைகள் இனி இக்குழுவிடம் புகார் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், மலையாள திரைப்பட இயக்குனர் ரஞ்சித் மீது வங்காள நடிகை மினு முனீர் அளித்த பாலியல் புகாரின் பேரில் கொச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில், அடுத்தடுத்து சிக்கப் போகும் நடிகர்கள் யார் யார் என்ற பரபரப்பு மக்களிடையே  நிலவி வருகிறது.

Night
Day